February 15, 2017 ஆஷிக்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் பெங்களூரு நீதிமன்ற 48-ஆம் எண் அறையில் ஆஜராக வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலா அங்கிருந்து நேராக கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.
முதலில் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர் பின்னர் குனிந்து ஜெயலலிதாவின் சமாதியில் கையால் மூன்று முறை அடித்து சபதம் என்றார்.
பின்னர், நிமிர்ந்து கை கூப்பி வாயில் முணுமுணுத்து பிரார்த்தித்து சமாதியை வலம் வந்து வணங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
பிறகு, ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு சென்ற சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர். படத்திற்கு முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் வெளியில் உள்ள அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் எல்லாவற்றையும் கலாய்க்கும் நெட்டின்கள், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவையும் விட்டு வைக்கவில்லை. ஜெயலலிதா சமாதியில் அவர் சபதம் ஏற்கும் புகைப்படத்தை வைத்து நகைச்சுவையைத் தூண்டும் வகையில் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி, சமூக வலைதளங்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.