October 7, 2017 தண்டோரா குழு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பரோலில் வெளியில் வந்திருப்பதால் அரசியல் மாற்றம் ஏற்படாது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இருக்கின்றது எனவும் இது சாதரண சூழ்நிலையல்ல எனவும் தெரிவித்தார்.
தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என தோன்றுகின்றது என கூறிய அவர் டெங்கு காய்ச்சலை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நிலையில் மத்திய அரசிடம் இருந்து டெங்கினை கட்டுப்படுத்த உதவியை தமிழக அரசு கேட்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்த அவர், அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடக்கப்படுகின்றது எனவும் தனியார் மருத்துவமனைகளில் இடைதரகர்களின் செயல்பாடுகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தின் தேவை குறைந்து இருப்பதால் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர் எனவும், ஊழியர்கள் யாரும் வேலை இழக்க கூடாது என்பது தங்களின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.
கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார் எனவும்,அதையும் மீறி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் என்றால் மக்களின் உணர்வுகள் குறித்து மத்திய அரசு பரீசிலக்கும் எனவும் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர் நேற்று ஆளுநர் பதவி ஏற்பின் போது எதிர்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்காதது குறித்து நேற்றே எதிர்ப்பினை பதிவு செய்தேன் எனவும் தெரிவித்தார்.
கோவையில் தீவிரவாத செயல்பாடுகளில் இருப்பவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்