August 1, 2017 தண்டோரா குழு
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் என்வரை கொலைசெய்தவழக்கில் தேடப்பட்டு வந்த சதாம் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் என்பவர் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, இந்த கொலையினை சதாம் மற்றும் முபாரக் ஆகியோர் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை தீவிரமாக தேடிய போலீசார் தேடி பிடிபடாத நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவர்குறித்து தகவல் தருபவர்களுக்கு 2 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இவர்கள் இருவர் குறித்து கடந்த 5 மாதமாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில்,சதாம் கருமத்தம்பட்டி பகுதியில் இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சதாமை இன்று மாலை கருமத்தம்பட்டியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான முபாரக் குறித்த தகவல்களையும் அவர் எங்கு தலைமறைவாக இருக்கின்றார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதை போல், இந்த கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் இதன்பின்னணியில் வேறு அமைப்புகள் எதுவும் இருக்கின்றதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சசிகுமார் கொலை வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தி வந்தநிலையில் முக்கிய குற்றவாளிகளில் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.