July 11, 2017 தண்டோரா குழு
தமது நெருங்கிய உறவினர்கள், உயிருக்கு உயிராய் பழகிய நண்பர்கள் இறந்தாலே அந்த உடலைப் பார்ப்பதற்குக் கூட பலரும் பயப்படுவார்கள். இறந்த செய்தி கேட்டாலோ அல்லது இறந்த வீட்டுக்குச் சென்றாலோ அங்கு இறந்தவர்களின் உடலைத் தொடுவதற்குக் கூட சிலர் பயப்படுவார்கள்.
உயிருடன் இருக்கும் வரை கட்டித் தழுவிய உறவுகள் கூட இறந்த பிறகு அவர்களது சடலங்களைத் தொட முன் வருவது இல்லை. இப்படி இருக்க சடலங்களைப் பிணவறையில் கையாளும் பணியாளர்களின் நிலையை நினைத்தால், நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறது.அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்று மனம் எண்ணுகிறது.
இறந்த உடல்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிய அவர்களின் வாழ்க்கைத்தரம் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. இவர்கள் தங்களின் குடும்பத்தை மறந்து “குடி” என்ற கூட்டுக்குள்ளே பிணவறையே வாழ்வறையாகக் கொண்டு வாழ்கிறார்கள்.
காலை முதல் மாலை வரை கடும் நாற்றத்துடனும் ஒரு வித அச்சத்துடனும் பணிபுரிவது எதற்காக? எல்லாம் அவர்களது வீட்டில் இருக்கும் சில உயிர்கள் வாழ வேண்டுமே என்பதற்காகத்தான்.
தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான அழுகிய உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துகள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.
ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி, அழுகிய உடலானாலும் அந்த உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும்போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள். அது முடித்த பிறகு, மீண்டும் அந்த உடலைக் கோரமாக இல்லாமல், நல்ல முறையில் சீர்ப்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள் இவர்கள்.
பிணவறையில் வேலை செய்பவர்கள் பலர் கைகளுக்குக் கவசம் அணிகிறார்கள். இந்த வாடை பழகிப் போனதாலோ என்னவோ சுவாசக் கவசம் அணிவதில்லை.
ஆரம்ப காலக் கட்டத்தில் பணியில் சேர்ந்தபோது இறந்த மனித உடல்களைப் பிரேத பரிசோதனைக்குத் தயார் செய்து வைக்கும்போது கொஞ்சம் பயப்படுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல பயம் போய்விடுமாம். தூங்கும்போது கூட, கனவில் இறந்தவர்கள் நேரில் வந்து சவுக்கை எடுத்து அடிப்பதைப் போல் தோன்றுமாம்.
இந்தப் பணிகளைச் செய்ய பெரும்பாலும் பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. பணியாளர்கள் தட்டுப்பட்டால் சடலங்களைக் கையாள, குறைந்த அளவே பணியாளர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சடலங்களை ஒரே ஆளாகக் தூக்கிச் செல்ல வேண்டும். தள்ளிக்கொண்டு போகவேண்டும். இதனால், அவர்களுக்கு அதிகமான பணிச்சுமை ஏற்படுகிறது.
சமூதாயத்தில் மதிக்கப்பட வேண்டிய இவர்கள் தரம் தாழ்த்தப்படுகிறார்கள். இதனால், வெளியுலகத்தில் இவர்களால் சகஜமாக வாழ முடிவதில்லை.பள்ளி, கல்லூரிகளில் இவர்களின் குழந்தைகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகின்றனர்.
முகம் சுளித்து அருவருப்படையும் நிலையில் உள்ள பிணங்களையும் தொட்டுத் தூக்கி அவர்களின் இறப்புக்கு என்ன காரணம் என்று புலனாய்வாளர்கள் அறிந்து கொள்ள இவர்களுடைய பங்களிப்பு அதிகம்.
ஆதரவற்றோர், அடையாளம் தெரியாத சடலங்கள் காவல்துறை விசாரணை முடியும் வரை பிணவறைக் கிடங்கிலேயே மாதக் கணக்கில் இருக்கும். அப்படிப்பட்ட சடலங்களைக் கையாளும்போது இவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார்கள்.
ஒரு நாள் ஒரு பொழுது இவர்கள் தங்களுடைய வேலை செய்வதை நிறுத்தினால் தெரியும். இவர்களது பணி எவ்வளவு மேன்மையானது என்று நாம் அன்று அறிவோம்.