March 16, 2017 தண்டோரா குழு
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் சார்பில் புதிதாக தொலைக்காட்சி அலைவரிசை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தத் தொலைக்காட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள், முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் சொல்லி மணவிலக்குப் பெறும் சட்ட நடைமுறை, பொது சிவில் சட்டம் ஆகிய பல்வேறு சட்டம் தொடர்பான விஷயங்கள் குறித்த நிகழ்வுகள் இடம்பெறும்.
பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த முக்கிமான தீர்ப்புகள் குறித்த விவாதங்களும் இந்த அலைவரிசையில் இடம்பெறும். மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் இந்த தொலைக்காட்சி அலைவரிசையை முறைப்படி தொடங்கி வைக்கிறது.
“ஸ்வயம் பிரபா” என்ற இந்த சட்டத் துறை தொலைக்காட்சி அலைவரிசை டிடிஎச் முறையில் நேரடியாக வீடுகளில் ஒளிபரப்ப வகை செய்யப்படும்.
“இந்த அலைவரிசை நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், குறிப்பாக சட்டமாணவர்களுக்குப் பயன்படும் வகையில் செயல்படும்” என்று சட்ட அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.
சமூகத்தில் விளம்புநிலையில் உள்ளவர்களுக்காக சட்டம் தொடர்பான கல்வி குறித்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவதற்கு உதவும் வகையில், இதற்கான குழுவில் (போர்டு) பிரபல ஹிந்திப் பட இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோரை ஈடுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.