January 10, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் வெள்ளிமலை பட்டணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பேரூர் வருவாய் ஆய்வாளர் தங்கள் அமைப்பு நிர்வாகிகளை மிரட்டுவதாகதமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் வெள்ளிமலை பட்டணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் எடுப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் வருவாய் ஆய்வாளர் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த பிரச்சனை குறித்து, பேரூர் வட்டாட்சியரிடம் முறையிட்ட போது அவர் ஆய்வு செய்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட வண்டிகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டார்.
தொடர்ந்து பழி வாங்கும் நோக்கோடு செயல்படும் பேரூர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மணல் லாரி உரிமையாளர்களை கொண்டு மிரட்டி வருகின்றனர். எனவே,இவ்வாறு செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் மீதும் வருவாய் ஆய்வாளர் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”, என மனுவில் கூறப்பட்டுள்ளது.