January 20, 2017
தண்டோரா குழு
சத்தீஸ்கரில் கண்ணி வெடி வெடித்ததில் 15 வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து ராய்ப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சிவ்ராம் பிரசாத் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2௦) கூறியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 15 வயது சிறுமி வியாழக்கிழமை இரவு சோன்பூர்-குருஷனார்பூர் கிராமத்தின் சாலை வழியாக சென்று கொண்டிருத்தனர். அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், அம்மாநிலப் பகுதியின் நாராயண்பூர் வரம்பின் கீழுள்ள துமானர் கிராமத்தில் மாவேயிஸ்டுகள் கண்ணி வெடியைப் புதைத்து வைத்தனர். அந்த வெடி வெடித்ததில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பாதுகாப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.