August 4, 2024 தண்டோரா குழு
கோவைக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பிரம்மாண்ட போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில் ஆக. 9 ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவா்கள், அதேபோல, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவா்கள், தங்களின் இளநிலை கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐடிஐ, இளநிலை, முதுநிலை இணைந்த படிப்புகளை தொடருவதற்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், முதல்வர் வருகையை ஒட்டிய கோவையில் முதல்வர் முக ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80 வது திமுக கவுன்சிலர் மற்றும் பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன் சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் பாசிச அரசியலே பதுங்கு; சந்தர்ப்பவாத அரசியலே ஒதுங்கு சமூக நீதி நாயகர் வருகிறார் என்ற வசனம் எழுதப்பட்டுள்ளது.