December 27, 2016 தண்டோரா குழு
கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கேரள அரசு திங்கள்கிழமை (டிசம்பர் 26) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சபரிமலையில் 1௦ முதல் 5௦ வயது வரை பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சட்டம் உண்டு. ஆனால், பெண்களையும் கோவிலில் அனுமதிக்க வேண்டும் என்று பல பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கேரள மாநிலம் சபரிமலை கோவிலை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிக்கிறது. அக்கோவிலின் மரபுகள் மற்றும் விதிகள் அனைவருக்கும் பொருந்தும்.
பெண்கள் வயது வரம்பின்றி கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் இதை குறித்து முடிவு எடுக்கும் வரை, கோவிலின் சட்டதிட்டங்கள் மற்றும் அதன் பாரம்பரியத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபல சமூக ஆர்வாளர், திருப்தி தேசாய் 1௦௦ பெண்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல இருப்பதாக அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். அவர் ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தின் சனி கோயில், ஹாஜி அலி தர்கா ஆகிய வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று திருப்தி தேசாய் தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.