March 23, 2017 தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்கக் கோரும் கடிதத்தை, கடந்த 9ம் தேதி கடிதம் அளித்தார். இதன் மீதான விவாதம் இன்று நடந்தது. இதற்கான தீர்மானத்தை இன்றைய அவை நிகழ்வில் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரும் இந்தத் தீர்மானத்தை, எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். திமுக-விற்கு 97 எம்எல்ஏ-க்கள் ஆதரவு இருந்ததால் தீர்மானத்தை அவையில் விவாதிக்க ஆதரவு கிடைத்தது.
இந்த தீர்மானத்தை ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கவில்லை. பின்னர் நடந்த குரல் ஓட்டெடுப்பில், தி.மு.க., கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. பின்னர் எண்ணி கணிக்கும் வாக்கெடுப்பு முறையில், தீர்மானத்துக்கு 97 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 122 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.