January 25, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் எல்லாம் சாதி வேற்றுமை மறந்து எல்லோரும் ஒன்று கூடி தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்று, அதனை சமத்துவ ஜல்லிக்கட்டாக ஆக்கிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தொண்டர்களுக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சி மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அங்கே சாதி அரசியலுக்கும் , மதவேறுபாடுக்கும் சமாதி கட்டப்பட்டது.
நடந்து முடிந்த இந்த அமைதி வழி அறப்போரின் முடிவில் சில விரும்பத்தகாத விளைவுகளைக் காவல்துறை ஏற்படுத்தியது. அதில் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரின் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், வாகனங்களுக்குக் காவலரே தீ வைக்கும் கொடுமைகள் எனப் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்து விட்டன. இந்தச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல, தவற்றுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.
மாணவர்கள், மக்களின் மகத்தான எழுச்சியின் விளைவால் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், இவற்றை எல்லாம் கண்டு அசையாது இருந்த மத்திய, மாநில அரசுகள் மக்கள் எழுச்சியைக் கண்டு இப்போது ஜல்லிக்கட்டு நடத்த வழி வகுத்துள்ளன.
அலங்காநல்லூர் உட்பட பல ஊர்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பாக அந்த நிகழ்ச்சிகளை நடத்திட ஆர்வமுடன் அந்தப் பகுதி மக்கள் காளைகளுக்குப் பயிற்சி-அலங்காரம் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் எல்லாம் சாதி வேற்றுமை மறந்து எல்லாரும் ஒன்று கூடி தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்று, அதைச் சமத்துவ ஜல்லிக்கட்டாக ஆக்க வேண்டும்.
சாதிமத பேதமின்றி, ஊண், உறக்கம் மறந்து ஒன்று கூடிப் போராடி தடியடிகளைத் தாங்கி, ரத்தம் சிந்தி, ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தொடர்வதற்குப் போராடிய மக்களுக்கு இந்த சமத்துவ ஜல்லிகட்டு நிகழ்ச்சியே மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்”
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.