July 19, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விவரங்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2023ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.09.2023 ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.