February 27, 2017 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரியம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும், சம்பளப் பாக்கியைப் பெற்றுத்தரக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு அளித்தனர்.
உக்கான் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜன் என்பவரின் மகள்களான பிராபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டேரி டவல்ஸ் தொழிற்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
அங்கு சுமார் 800க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பணிபுரிந்து வருகிறார்கள். தொழிற்சாலையில் உள்ள பெண்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கித்தான் பணிபுரிய வேண்டும் என அந்த தொழிற்சாலை நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. இதன் காரணமாக பிராபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.
விடுதியில் முறையான சாப்பாடு இல்லாமல், அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லாத காரணத்தினால் அவர்கள் மூவரும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், புகார் குறித்து எந்த நிர்வாகம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் அவர்களுக்குத் தரவேண்டிய சம்பளத்தையும் சரிவர தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் அங்கு தொடர்ந்து பணிபுரிய விருப்பமின்றி வெளியேறிவிட்டனர். அவர்களைப் போலவே பல பெண்களும் அடிப்படை வசதியில்லாமல் அங்கு தவித்து வருவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதையடுத்து, அவர்கள் மூவருக்கும் வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கக் கோரியும், தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.