October 4, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கொரோனா இரண்டாவது அலையின் போது மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் படி வீடு வீடாக சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி முழு வீழ்ச்சில் துவங்கப்பட்டு தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.அப்போது மாநகராட்சி சார்பாக சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணியில் 4500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.ஒவ்வொரு வார்டிலும் 100 வீட்டுக்கு ஒரு நபர் நியமிக்கப்பட்டு இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து நாள் ஒன்று 200க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் 500 வீட்டுக்கு ஒரு நபர் நியமிக்கப்பட்டு சளி, காய்ச்சல் கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் 100 வீட்டுக்கு ஒரு நபர் என்கிற நிலையில் தற்போது அது 500 வீட்டுக்கு ஒரு நபராக நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.தினமும் 50 முதல் 60 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன,’’ என்றார்.