May 27, 2016 தண்டோரா குழு.
விடுமுறை வந்தாலே ரயிலில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பு.அதுவும் வெகு நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யவேண்டும். அல்லது தட்கல் முறையில் ரிசர்வ் செய்ய வேண்டுமென்றால் செலவு கூடுதலாகும்.
அவசரமாக எங்கேனும் செல்ல வேண்டுமெனில் உறுதியான டிக்கெட் கிடைப்பது கடினம். நம்முடைய பெயர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும். உறுதியான டிக்கெட் எடுத்தவர் தனது பயணத்தை ரத்து செய்யும் பட்சத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதல் நபர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இதேப் போன்று முதல் வகுப்பில் இடம் ஏற்படும் போது இரண்டாம் வகுப்பிலிருந்தும், இரண்டாம் வகுப்பில் இடம் காலியாகும் போது மூன்றாம் வகுப்பிலிருந்தும் காத்திருக்கும் பயணிகளை வகுப்பு உயர்த்திப் பயணம் செய்ய அனுமதிப்பர். இதே போல் ஏசியில் பயணம் செய்வோரும் உயர்த்திப் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இதுவரை இந்த வகுப்பு மாற்றங்கள் ரயில் பயணத்தின் உள்மாற்றங்களாக இருந்து வந்தன.
ஆனால் தற்போது, விமான சேவையையும் ரயில் சேவையுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ராஜ்தானி ரயிலில் முதல் வகுப்பு மற்றும் ஏ.சியில் இருப்பவர்கள் விமானத்தில் பயணம் செய்ய விருப்பப்பட்டால் அவர்கள் எந்த உபரிக் கட்டணமும் செலுத்தாமல் விமானத்தில் பயணம் செய்யலாம்.
அதே சமயம் 2வது மற்றும் 3 வது ஏ.சி வகுப்பிலுள்ளவர்கள் விமானப் பயணத்திற்கு அழைக்கப்பட்டால் 1,500 முதல் 2,000 ரூபாய் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரலாம்.
இது குறித்து பேசிய ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும்,இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆபிஸ் ருமான அஷ்வானி லோகானி கூறும்போது, இந்திய ரயில்வேயும், ஏர்இந்தியாவும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வதோடு வருமானமும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி 16 மாநிலங்களின் அதிகாரிகளோடு விவாதித்ததில் அனைவரும் முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், தங்கள் மாநிலத்தின் பல இடங்களுக்கும் இந்த விமான சேவையை விரிவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏர்இந்தியா விமானச் சேவை தற்போது மேலும் புதிய விமானங்களை இயக்கச் சம்மதம் தெரிவித்துள்ளது.