April 19, 2017 தண்டோரா குழு
குழந்தைகளின் பள்ளி மற்றும் சாதி சான்றிதழ்களில் தந்தையின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாக்கிழமை பேசியதாவது;
விதவை பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நிலையை உணர்ந்து, அவர்களது குழந்தையின் பள்ளி மற்றும் சாதி சான்றிதழில் தந்தையின் பெயர் கட்டாயம் இருக்கவேண்டும் என்ற சட்டத்தை தடை செய்ய வேண்டும்.
தந்தையின் பெயர் இல்லாத காரணத்தால் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி சான்றிதழ் வாங்க முடியவில்லை என்று கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கணவனை பிரிந்த பெண்கள் என்னை சந்தித்து, தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
கல்வி சான்றிதழ்களில் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு தந்தையின் பெயருக்கு பதில் தாயின் பெயரை எழுதும் சட்டத்தை அமல்படுத்த கோரி மனித வள மேம்பாடு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவேத்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்தார்.