September 23, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6,500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், பெரிய அளவிலான தொழிற்பேட்டைகள், அலுவலகங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், புறவழிச்சாலை செல்வதற்கான இணைப்பு சாலைகள் போன்றவைகள் உள்ளன.
மாநகராட்சி சாலைகளில் மட்டும் தினமும் லட்சக்கணக்காண வாகனங்கள் செல்கின்றன.
இதனிடையே பாதாள சாக்கடை திட்டம், மழை, குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் தோண்டப்படுகின்றன. இதனாலும், இயற்கை பேரிடர்களாலும் சாலைகள் கடுமையான சேதம் அடைக்கின்றன.
கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழக அரசு சார்பாக ஏற்கனவே ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியும் சாலைகளின் சீரமைப்புக்காக பல்வேறு கட்டங்களாக விடுவிக்கப்படுகின்றன.
இதனிடையே தமிழ்நாடு ஊரக கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,
‘‘கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு ஊரக கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து தண்ணீர் பந்தல் சாலை உள்பட 112 சாலைகள் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளன’’ என்றார்.