June 28, 2017 தண்டோரா குழு
கோவை அடுத்த காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் சிக்னல் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் புகார்.
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் சில நாட்களாக சிக்னல் விளக்கு எரிவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விளக்குகள் எரிவதில்லை என்பதால் நான்கு திசைகளில் இருந்தும் வாகனங்கள் வருகின்றன. வேகமாக வரும் வாகனங்களால் அங்கு பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அந்த சாலை வழியாக செல்லும் பெண் ஒருவர் கூறுகையில்,
“காலை மற்றும் மாலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு இந்த சாலை வழியாக தான் அழைத்துச் செல்வேன். தற்போது சிக்னல் விளக்கு எரியாததால் சாலையின் இடது மற்றும் வலது புறம் உள்ள இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் என்பதால் ஒரு வித பயத்துடனே வாகனத்தை இயங்கி வருகிறேன்.” என்றார்.
கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து சதவிகிதம் அதிகம் எனவும் அதனை கட்டுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறி வரும் இந்த சூழ்நிலையில் காரனம்பேட்டை பகுதியில் சிக்னல் விளக்குகள் எரியாதது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து சேதுபதி என்பவர் கூறுகையில்
“கடந்த நான்கு நாட்களாக நான் பார்த்தவரை இப்பகுதியில் சிக்னல் விளக்கு எரிவதில்லை. இதனால் இச்சாலையை கடந்த செல்லவே சிரமமாக உள்ளது. அரசு உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்
“சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலும் மின்சார கட்டணம் கட்டவில்லை என்றால் சிக்னல் விளக்குகளுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.” என்றார்.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரனம்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.