October 2, 2021 தண்டோரா குழு
சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே 50 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். கட்டிடங்கள் பழுதடைந்ததால், அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர். சில குடும்பத்தினர் அங்கேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பழுதடைந்த 3 வீடுகளின் மேற்கூரை, பால்கனி மற்றும் முன்புற சுவர் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.மக்கள் குடி இல்லாத வீடுகள் இடிந்து விழுந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.
எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு விரைந்து பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.