July 30, 2022 தண்டோரா குழு
சிங்காநல்லூர் குளத்திற்குள் கழிவுநீர் வராமல் தடுக்க வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து திட்டம் தயாரிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் கோவை மாநகராட்சி மற்றும் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மையம் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர், பல்லுயிர், சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் துவங்கி வைத்தார்.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
இப்பயிற்சியானது இயற்கையான இடங்களில் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளியின் 30 முதல் 35 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்கள் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டு ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சிங்காநல்லூர் குளக்கரையில் நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடந்து செல்லும் வழியில் தண்ணீர், பல்லுயிர், சுற்றுச்சூழல், இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் இயற்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி கால அட்டவணை படி நடத்தப்படவுள்ளது. சிங்காநல்லூர் குளத்திற்கு பல நாடுகளிலிருந்து பலவகையான பறவைகள் வந்து செல்கின்றன. பலவகையான வண்ணத்துப்பூச்சிகளும் உள்ளது. இயற்கை சூழல் நிறைந்த சிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவுநீர் குளத்திற்குள் வராமல் தடுக்க இயற்கையான முறையில் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளோடு கலந்தாலோசித்து திட்டம் தயாரித்து அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஆகாயத்தாமரைகளை அகற்ற புதிய நடவடிககைகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் சிங்காநல்லூர் குளத்தை பார்வையிட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்காநல்லூர் குளத்திற்கு வரும் ராஜவாய்க்கால்வாய் மற்றும் பெரிய குளம், வாலாங்குளம் வழியாக வரும் கால்வாயும் உடனடியாக தூர்வாரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி கமிஷனர் முத்து ராமலிங்கம், சுகாதார அலுவலர் முருகா, மதுக்கரை வன சரகர் சந்தியா, மதுக்கரை வனவர் ஐயப்பன், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.