October 7, 2017 தண்டோரா குழு
சினிமா டிக்கெட் கட்டணத்தை 25 சதவிகிதம் வரை உயர்த்திக்கொள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் 10% கேளிக்கை வரி விதித்து கடந்த மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
தமிழக அரசின் கூடுதல் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கூட்டாக அறிவித்தன.
இந்நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, சினிமா கட்டணத்தை உயர்த்திக்கொள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.160 வரையும், மற்ற இடங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.140 வரை வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த புதிய டிக்கெட் விலை கட்டணம் வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.