August 14, 2023 தண்டோரா குழு
சினைப்பை நீர் கட்டி பிரச்னைக்கு தீர்வு காண ஏஜிஎஸ் ஹெல்த்கேர் புதிய சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து ஏஜிஎஸ் ஹெல்த்கேர் கிளினிக் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் நிருபர்களிடம் கூறியதாவது:
சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை (PCOS), பெண்களுக்கு இனப்பெருக்க ஆண்டுகளில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது. இந்த பிரச்னை இருப்பின், பெண்களுக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படாது அல்லது பல நாட்களுக்கு இருக்காது. பெண்களுக்கு ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரித்தால், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை ஏற்படலாம். குறிப்பாக, மலட்டுத்தன்மை, கர்ப்பகால சர்க்கரை நோய் அல்லது கருவுற்ற நிலையில் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுதல், கருச்சிதைவு அல்லது குறைபிரசவம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
சினைப்பை நீர் கட்டிகளால் பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இது, உணர்வுப்புர்வமாக பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. பல்வேறு சூழ்நிலைகளில், இது குடும்பங்களிடையே பிரிவையும் கூட ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையானது, அதிக ஹார்மோன் சுரப்பாலும், இன்சுலின் எதிர்ப்பாலும் ஏற்படுகிறது. இதை சிறுவயதிலேயே கண்டறிய முடியும். வயது, சிறந்த உணவு பழக்க வழக்கங்கள், உடல்பயிற்சி மற்றும் மனநல ஆலோசனைகள் மேற்கொண்டு சரி செய்ய முடியும். மனரீதியான, உடல் ரீதியாக மட்டுமின்றி, நிதிச்சுமையையும் குறைக்க முடியும்.
இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண கோவை நகரில் பன்னோக்கு மருத்துவமைனயான ஏஜிஎஸ் ஹெல்த்கேர் ஒரு சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்ட ஒரு அணியை கொண்டுள்ளது. ஒரு மருத்துவர், மகப்பேறு ஆலோசகர், கதிர்வீச்சியல் நிபுணர், பயிற்சி பெற்ற உணவுமுறை, நுண்ணுாட்டசத்து பயிற்சியாளர். உடற்பயிற்சியாளர், தோல்நோய் சிகிச்சையாளர் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து நோயாளியின் பிரச்னைகளை அறிந்து சிகிச்சை தருகின்றனர். இந்த கிளினிக், ஆகஸ்ட் 18 முதல் ஒவ்வொரு வெள்ளி கிழமையன்று (பகல் 12 மணி முதல் மாலை 4.00 மணிவரை) செயல்படும்.
சிகிச்சை பெற விரும்புவோர் 9659455556 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு நாள் முன்பாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும்.சினைப்பை நீர் கட்டி சிக்கலில் இருந்து பெண்கள் விடுபட, 77 வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் இந்த கிளினிக்கை துவக்குகிறோம் என்றார்.