July 18, 2022 தண்டோரா குழு
சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஏராக்குறை பகுதியில் சுமார் 8 மாத குட்டி யானை வாயில் ரத்தத்துடன் உயிரிழப்பு.வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வேடர் காலனியை ஒட்டியுள்ள ஏராக்குறை பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,அப்பகுதியில் வாயில் ரத்தத்துடன் சுமார் 8 மாத குட்டி யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் இறந்து கிடந்த யானையின் உடலை மீட்டனர். மேலும்,மாவட்ட வன அலுவலர் அசோக் குமார்,உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் மாவட்ட வனக்கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார்,சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வனக்கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் கூறுகையில்,
பிரேத பரிசோதனை முடிவிலேயே யானை இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்துள்ளார். கோவையில் தொடர்ந்து கடந்த சில மாதங்களில் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.