February 7, 2017 தண்டோரா குழு
சிறுவாணி அணையின் நிரந்தர இருப்பில் இருந்து மோட்டார் வைத்து நீர் எடுத்துக் கொள்ள தமிழக அரசுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்த காரணத்தினால் கோவை மாவட்டத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த சிறுவாணி அணையில் நீர் வரத்து இல்லாததால் நீர் மட்டம் பூஜ்ஜியத்தை எட்டியது.
இதனால், கோவை மக்களின் குடிநீர்l் தேவைக்காக சிறுவாணியிலிருந்து எடுக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வார்டுகள் மற்றும் 35 வழியோர கிராமங்களின் குடிநீர்த் தேவைக்காக தினமும் 10.14 கோடி லிட்டர் நீர் அணையிலிருந்து எடுக்கப்பட்டு வந்தது.
தற்போது சிறுவாணியில் நீர் இல்லாத காரணத்தினால் கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு நீர் வழங்க மாற்று ஏற்பாடாக பில்லூர் அணையின் நீரை மாநகராட்சி விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் சிறுவாணி அணையின் குடிநீரைப் பயன்படுத்திவந்த வழியோர கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடாக உள்ளூர் குடிநீர் ஆதாரங்களைப் பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அக்கிராமங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், உள்ளூர் குடிநீர் ஆதாரங்களில் பொதுமான அளவு நீர் இல்லாததால் கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து சிறுவாணி அணையின் நிரந்தர இருப்பில் இருந்து மோட்டார் வைத்து நீர் எடுத்துக் கொள்ள தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேரள அரசிடம் அனுமதி கோரியிருந்தனர்.
அந்தக் கோரிக்கையின் மீது கேரள அரசு அனுமதி அளித்து உள்ளதாகத் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அணை நீர்மட்டம் பூஜ்ஜியத்தைத் தொட்டதால் , நிரந்தர இருப்பில் இருந்த நீரை மோட்டார் வைத்து எடுத்துக்கொள்ள கேரள அரசிடம் அனுமதி கேட்டிருந்தோம். கேரள அரசு நீர் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இது கோவை மாவட்டத்தின் இரண்டு மாத குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும்” என்றார்.