June 28, 2022 தண்டோரா குழு
சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று மட்டும் 23 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகரில் உள்ள 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநில எல்லைக்குள் அமைந்து உள்ள இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய தொடங்கும்.
இதனால் அணையின் நீர்மட்டம் உயரும். ஆனால் நடப்பாண்டில் ஜூன் மாதம் தொடங்கி 3 வாரங்கள் முடிந்த நிலையில் பருவமழை தொடங்காமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது சிறுவாணி அணையில் 14.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்தால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.