May 14, 2022 தண்டோரா குழு
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணை 49.53 அடி உயரும் கொண்டது. ஆனால் கேரளா அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை.
தற்போது சிறுவாணியின் நீர்மட்டம் 18.95 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 90 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 53 மில்லியன் லிட்டருக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 52.63 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் 44.88 எம்.எல்.டி. குடிநீர் கோவை மாநகராட்சிக்கும் மீதியுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.