March 22, 2022 தண்டோரா குழு
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் நன்றாக மழை பெய்தது.இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. சிறுவாணி அணையில் இருந்து தினமும் 90 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது.இதனிடையே தற்போது அணையின் நீர்மட்டம் 24.82 அடியாக உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டது. இருப்பினும் இந்த அணையில் 45 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதிக்கிறது.தற்போது ஒரு நாளைக்கு 57.11 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதில் 49.36 எம்.எல்.டி. குடிநீர் கோவை மாநகராட்சிக்கும் மீதியுள்ள குடிநீர் வழியோர கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.