July 18, 2017 தண்டோரா குழு]
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் அதிமுக பொதுச்செயலாளர் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையில், சசிகலா சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறைதுறை டிஐஜி ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார்.
இந்த சூழலில் சிறையில் சசிகலா தொடர்பான வீடியோ ஆதாரங்களை சிறைதுறை அதிகாரிகளே அழித்து வருவதாக டிஐஜி ரூபா கர்நாடக உள்துறை செயளருக்கு அறிக்கை எழுதியிருந்தார். இதற்கிடையில், நேற்று டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் மாலை நேரத்தில் சசிகலா நைட்டியுடன் உலா வருவது போன்ற வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியானது. எந்த கைதிக்கும் இந்த வசதி செய்து தரப்படவில்லையாம். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. .
இந்த வீடியோ காட்சி வெளியானதால் பெங்களூர் சிறை விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.