December 30, 2016 தண்டோரா குழு
நியூயார்க் நகர் காவல்துறை அதிகாரிகளாகப் பணிபுரியும் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடியுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காவல் துறை பயிற்சி பெற்றோருக்கான பட்டமளிப்பு விழாவை அடுத்து காவல்துறை ஆணையர் ஜேம்ஸ் ஒ நீல் புதன்கிழமை (டிசம்பர் 28) கூறியதாவது:
அணைத்து மத உறுப்பினர்களுக்கும் பொதுவான புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சீக்கியர்கள் தங்களது மதக் கட்டளையின்படி தாடியுடனும் தலைப்பாகையுடனும் தாங்கள் பணி புரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி சீக்கிய இனத்தை சேர்ந்த காவலர்கள் NYPD எனப்படும் நியூயார்க் நகர காவல்துறை பிரிவு முத்திரை கொண்ட கருநீல தலைப்பாகை அணிய வேண்டும். முகத்தில் இருந்து ஒன்றரை அங்குலத்துக்கு மிகாத தாடியை அவர்கள் வைத்துக்கொள்ளலாம்.
தற்போது நியூயார்க் நகர காவல்துறையில் 16௦ சீக்கியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய எண்ணிகையை அதிகரிக்க மேலும் பல திட்டங்களை வகுத்து வருகிறோம்.
இவ்வாறு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு நியூயார்க் நகர் காவல்துறையில் பணியாற்றும் சீக்கியர்கள் வரவேற்று, நன்றி செலுத்தியுள்ளனர். இந்த அறிவிப்பு அமெரிக்க நாட்டில் வசிக்கும் சீக்கிய இனத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.