February 6, 2017 தண்டோரா குழு
சீனாவின் ஷெஜியாங் பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஏற்பட்டு தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து சீனா காவல்துறை அதிகாரி கூறியதாவது:
“கிழக்கு சீனாவின் ஷெஜியாங் பிரதேசத்தில் உள்ள டியாண்ட்டை என்ற உள்ளூரில் ஷூசிங்டாங் என்ற கால்களுக்கான மசாஜ் நிலையம் உள்ளது. அந்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) மாலை 5.26 மணியளவில் தீடீரென தீப் பிடித்ததில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மக்கள் ஜன்னல் வெளியே குதித்து தப்பி ஓடினர் என்று பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். இங்கு வந்த போது தீயில் சிக்கிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மோசமான நிலையில் இருந்த 1௦ பேர் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரை வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனாவின் பிரபல இணைய தளம் சினா வேய்போ வெளியிட்ட காணொளியில், ஒரு கட்டடத்தில் அதிக புகை சூழ்ந்து இருப்பதுவும், மக்கள் ஜன்னல் வழியாக தப்பி ஓடுவதும், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடுவதும் பதிவாகியிருந்தன.