January 30, 2017 தண்டோரா குழு
சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே ஒருவரைப் புலிகள் கொன்ற சம்பவம் அந்நாட்டின் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் உள்ள உயிரியல் பூங்காவில் புலிகள் இருக்கும் இடத்தின் வேலி அருகே நின்றுகொண்டு இருந்த ஒருவரைப் புலி தாக்கியதில் உயிரிழந்தார். ஆறு மாதங்களில் நடந்த இரண்டாவது சம்பவம் ஆகும்.
சீனாவின் ஷாங்காயின் தென் பகுதியில் இருந்து சுமார் 2௦௦ கிலோமீட்டர் தொலைவில் நிங்போ என்னும் இடத்தில் யூன்கோர் உயிரியல் பூங்காவில் உள்ள டைகர் ஹில் உள்ளது. அவ்விடத்திற்கு ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது அவரை அந்தப் பூங்காவில் இருந்த புலிகள் திடீரென தாக்கின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் உடனே அவசர மணியை அடித்துள்ளனர்.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்த வந்த அப்பூங்காவின் காவலாளிகள் தாக்கிய புலியைச் சுட்டு கொன்றனர். மற்ற புலிகளை விரட்ட பட்டாசுகளைக் கொளுத்தியும், தண்ணீரைப் பாய்ச்சி அடித்தும் சுமார் ஒரு மணி நேரம் போராடினர். படுகாயம் அடைந்த அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கறுப்பு உடையணிந்த ஒருவரை ஒரு புலி கொடூரமாக தாக்கும் காட்சியும், மக்கள் பயந்து அலறி அங்கும் இங்கும் ஓடும் காட்சியும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஷாங்காய் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே போல், 2௦16ம் ஆண்டு ஜூலை மாதம், பெய்ஜிங்கில் உள்ள பாதாளிங் உயிரியல் பூங்காவில் காரிலிருந்து இறங்கிய பெண்ணைப் புலி தாக்கி இழுத்துச் சென்றது. அவரைக் காப்பாற்ற முயன்ற அப்பெண்ணின் தாயாரும் இரண்டு புலிகள் தாக்கி உயிரிழந்தார் என்பது நினைவிருக்கும்.