July 25, 2017 தண்டோரா குழு
சீனாவை சேர்ந்த ஒரு பெண்ணின் பித்தப்பையில் 2௦௦ கற்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது பல இளைஞர்கள், உடல் எடை கூடாமல் இருக்க, உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால் வரும் பின் விளைவுகளை உணருவதில்லை. காலை உணவை தவிர்த்ததால், சீனாவை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் வந்த விளைவு பலருக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
சீனாவை சேர்ந்த 45 வயது சென் என்னும் பெண்மணி கடந்த 8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. முதலில் மருத்துவமனைக்கு செல்ல தயங்கியுள்ளார். பிறகு வலி தாங்க முடியாமல், ஹெய்சுவில் என்னும் இடத்திலுள்ள குவன்ஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய வயிற்றின் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருப்பதை கண்டு, அறுவை சிகிச்சை மூலம் அந்த கற்களை வெளியே எடுக்க முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கற்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போயினர்அவருடைய பித்தப்பையில் இருந்து 2௦௦ கற்களை வெளியே எடுத்துள்ளனர். சில கற்கள் கோழி முட்டை அளவில் கூட இருந்ததது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“சென் கடந்த 8 ஆண்டுகளாக, காலை உணவை தவிர்த்து வந்ததால், அவருடைய பித்தப்பையில் கற்கள் உருவாகியுள்ளது. காலை உணவை தவிர்கும்போது, பித்தப்பை சுருங்குவதையோ அல்லது விரிவதையோ நிறுத்தி விடுகிறது; பித்த நீர் அதிகரித்து விடுகிறது. இதன் விளைவாக பித்தப்பையில் கற்கள் உருவாகிறது” என்று சென்னுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.