May 24, 2017 தண்டோரா குழு
சீமான் மட்டும் தமிழர் அல்ல எல்லோருமே தமிழர்கள் தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை அதற்கு முன்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.ரஜினியை விமர்சித்து சீமான் பிரிவினைவாத, தூண்டுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார். அவன், இவன் என்று வார்த்தைகளை பயன்படுத்திப் பேசுகிறார். நான் சீமானை திருப்பி கேட்க ஆரம்பித்தால் சரியாக இருக்காது.
சீமானை விட பாரதிய ஜனதா கட்சியினருக்கு தமிழ் உணர்வு அதிகமாகவே இருக்கிறது.நாங்களும் தமிழ் ரத்தங்கள் தான். நானும் தமிழச்சி தான். ஆகையால் எதிர்மறை அரசியலை தூக்கிப் பிடிப்பது சரியல்ல. இந்த போக்கை சீமான் கைவிடவேண்டும்.
தமிழை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். சீமான் மட்டும் தமிழர் அல்ல.எல்லோருமே தமிழர்கள் தான். அந்த உணர்வு மட்டுமே இருக்க வேண்டும். தமிழை தூக்கிப் பிடிப்பதாக நினைத்து, தமிழ் மொழிக்கு ஊறுவிளைவிக்கக்கூடாது என்றார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தேசிய சிந்தனை உள்ளவர். எனவே பாரத பிரதமர் மோடி, அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோருடன் இணைந்து ஊழலை ஒழிக்க ரஜினி எங்களுடன் வரவேண்டும் என்று தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கிறோம்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தைக் கூட்டி வருகிறது. அதனுடன் மேலும் பலம் சேர்ப்பதற்காக ரஜினியை அழைப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார்.
அதைப்போல் ரஜினிகாந்தை பாஜக பின்பக்கமாக இருந்து இயக்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் எப்போதுமே முன்பக்கமாக இருந்து அரசியல் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.