August 15, 2017 தண்டோரா குழு
உத்தர பிரதேஷ் மாநிலத்தின் லக்ஷ்மிபுர் கேரி மாவட்டத்தில் செளதிப்பூரில் இந்திய சுதந்திர தினத்தை அங்கிருக்கும் மக்கள் கொண்டாட மறுத்துவிட்டனர்.
இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 71வது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறது. ஆனால், உத்தரபிரதேஷ் மாநிலத்தின் லக்ஷ்மிபுர் கேரி மாவட்டத்தில் செளதிப்பூரில் இந்திய சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும், அங்கு எந்தவித வளர்ச்சியுமில்லாத காரணத்தால், இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட மறுத்துவிட்டனர்.
தென் கேரி வனப்பகுதியிலுள்ள மைலாணி பகுதியில் வசிக்கும் மக்கள் வறுமையால் தவிக்கிறனர். அவர்கள் காடுகளில் தினக் கூலியை எதிர்பார்த்து தங்கள் காலத்தை கடத்தி வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லை, சாலையும் மோசமான நிலையிலுள்ளது.மக்கள் இன்னும் திறந்த வெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகின்றனர்.
கடந்த 1923ம் ஆண்டு சௌதிபூர் கிராமம் உருவாகியது. ஆனால், இந்திய சுதந்திரம் பெற்ற பிறகும், கிராமங்களின் வளர்ச்சி குறித்த திட்டங்களில் சேர்க்கப்படும் கிராமங்கள் பட்டியலில், அந்த கிராமத்தை மாவட்ட அதிகாரிகள் சேர்த்ததில்லை.
அந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சார இணைப்பு தரப்பட்டது. ஆனால், செளதிப்பூர் கிராமம் மட்டும் இருளில் உள்ளது. அந்த கிராமத்தை சுற்றி காடுகள் இருப்பதால், காட்டு விலங்குகள் கிராமத்திற்கு நுழைந்து விடுகின்றன. தங்கள் குழந்தைகளை அந்த விலங்குகளிடமிருந்து காப்பாற்ற, சூரியன் மறைந்த பிறகு, அவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்புவதில்லை.
“எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லை. சாலைகள் மோசமாக இருப்பதால், அங்கு யாரும் வரவிரும்புவதில்லை. இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் சுமார் 41 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு மட்டும் இன்னும் வரவில்லை. அது குறித்து கேட்டும் போதெல்லாம், வரும் என்று தான் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த அதே நிலையில் தான் இன்றும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். சுதந்திரம் வாங்கி என்ன பிரயோசனம்? எங்கள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் தான், இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என்று அந்த கிராமத்தினர்கள் தெரிவித்தனர்.