August 4, 2023 தண்டோரா குழு
சிங்கப்பூருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் இருந்து 5 லட்சத்து 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று இந்தியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சிங்கப்பூர் சுற்றுலா வாரிய பிராந்திய இயக்குனர் ஜி.பி. ஸ்ரீதர் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற வட்ட மேஜை நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் கூறுகையில்,
அதிக அளவிலான இந்திய சுற்றுலா பயணிகளை சிங்கப்பூருக்கு வரவழைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 2019–ம் ஆண்டில் மொத்தம் 14 லட்சம் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கிறார்கள். அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகையைப் பொறுத்தவரை சீனா மற்றும் இந்தோனேஷியாவிற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது.
இதில் தங்கள் ஓய்வு நேரத்தை கழிப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள், இளைஞர்கள், சுற்றுலா நிறுவனங்கள் மூலம் வந்த பயணிகள், பல்வேறு நிறுவனங்களின் கூட்டங்களில் பங்கேற்க வந்தவர்கள் என பலரும் அடங்குவார்கள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூருக்கும் இந்தியாவில் உள்ள 19 நகரங்களுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது, அவற்றில் 4 தமிழ்நாட்டில் உள்ளது.
இந்த வட்ட மேஜை நிகழ்ச்சியில் கோவை மற்றும் கோவையை சுற்றி உள்ள சுற்றுலா ஆபரேட்டர்கள் 38 பேர் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய சலுகைகளையும் அவர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். சமீபத்தில் ஜெய்ப்பூர் மற்றும் புனேவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தியா, மத்திய கிழக்கு, தெற்காசியாவிற்கான இன்டர்நேஷனல் குழும, ஏரியா இயக்குனர் வோங் ரென்ஜி கூறுகையில், சிங்கப்பூரில் விலங்கியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக பறவைகள் சரணாலயம் மற்றும் ஐஸ் கிரீம் அருங்காட்சியம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளன. பல இந்தியர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் விடுமுறையை கழிக்க அதிக அளவில் சிங்கப்பூரை தேர்வு செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பொழுதுபோக்கும் இடங்கள், கேளிக்கை பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் தவிர இந்திய கலாச்சாரம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. உலகத் தரம் வாய்ந்த விமான போக்குவரத்து மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் 40–க்கும் மேற்பட்ட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய இடங்கள் ஆகியவை சிங்கப்பூரை சிறந்த சுற்றுலா மையமாக மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.