February 14, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டால், அந்த நேரத்தில் சூழலைப் பொறுத்து தி.மு.க. முடிவெடுக்கும் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது;
“ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி. குன்ஹாவின் தீர்ப்பைத் தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் வழங்கிய தீர்ப்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குத் தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்திருந்தார். நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு நிலை நிறுத்தப்பட்டது. இந்தl் தீர்ப்பு பொதுவாழ்வில் இருப்பவர்கள் தூய்மைக்கு இலக்கணமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டதால், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய அரசியல் சாசனப்படி தேவையான நடவடிக்கைகளை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்க வேண்டும்.
சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டால், அந்த நேரத்தில் சூழலைப் பொறுத்து தி.மு.க. முடிவெடுக்கும்”.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.