April 15, 2017 தண்டோரா குழு
ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் மட்டுமே இருந்த வைஃபை வசதி தற்போது மயானங்களுக்கும் வந்துவிட்டது. ஆம் சென்னையிலுள்ள வேலங்காடு சுடுகாட்டில் வை-ஃபை வசதி அளிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம் தற்போது மனிதனின் கடைசி போக்கிடமான மயான பூமி வரை சென்றுவிட்டது. ஒரு காலத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த பல சுடுகாடுகள், தற்போது தனியார் அமைப்புகளின் உதவியுடன் இன்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மின்சார தகன மயானங்களாக மாறி வருகின்றன.
அந்தவகையில்,சென்னை மாநகராட்சிக்குட்பட்டது வேலங்காடு பகுதியில் உள்ள மயான பூமி.ஒரு காலத்தில் புதர் மண்டிக்கிடந்த இந்த மயானத்தை ஐ.சி.டபிள்யூ.ஓ என்ற அமைப்பின் மூலம் சீர் செய்யப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.எனினும், இங்கு மொபைல் ஃபோன் கோபுர சிக்னல்கள் பலவீனமாக இருப்பதால் ஃபோன்களை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.இதனால், இங்கு வருபவர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிக்காட்சிகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட வசதிகள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்த இயலாத கஷ்ட நிலையில் உள்ளனர்.
இதையடுத்து,அந்த அமைப்பின் மூலம் புதிய முயற்சியாக வேலங்காடு மயானத்தில் வை-ஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கக் கூடியவர்களுக்கு, தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கை நேரடியாக இணையத்தின் வழியாக பார்ப்பதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகஐ.சி.டபிள்யூ.ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி வேலங்காடு மயானத்தில் அனைத்து கோப்புகளும் கணினியில் பராமரிக்கப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களில் போடப்படும் மாலைகள் , இயற்கை உரமாக மாற்றப்பட்டு, அங்கிருக்கும் செடி,மரங்களுக்கு உரமாக இடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.