March 21, 2017 தண்டோரா குழு
சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் வரும் 27ம தேதி நேரில் ஆஜராக வில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜாமீன் மனு மீதான விசாரணையில், குற்றப் பத்திரிக்கையை டிசம்பர் 6-க்குள் தாக்கல் செய்யாவிடில் மாநகர காவல் ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யாததால், காவல் ஆணையர் ஜார்ஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அரசு தலைமை உதவி வழக்கறிஞர் கோவிந்தராஜ் ஆஜராகி, கடந்த வெள்ளிக்கிழமை மாநகர காவல்துறை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி வைத்தியநாதன் தற்போது நேரில் ஆஜராகாமல் இருக்க அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனவும் வரும் 27-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டதோடு நேரில் ஆஜாராகாவிட்டால் கைது செய்யவும் உத்தரவிட்டார்.