July 15, 2022 தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சுல்தான்பேட் ஒன்றியத்தைச் சேர்ந்த செலக்கரிச்சல் கிராமத்தில் ‘ரூரல் ரைசிங்’ (Rural Rising) – என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் யுனைடட் வே ஆஃப் பெங்களூரு என்ற நிறுவனத்துடன் இணைந்து அல்ஸ்டாம் தொடங்கியது.
அல்ஸ்டாம் நிறுவனம் தனது சி எஸ் ஆர் (கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) நிதியின் கீழ் இத்திட்டத்தை தொடங்கியது.
இந்திய அரசின் மிஷன் அந்த்யோதயா ஆய்வில் கிராமத்தின் வளர்ச்சித் தேவைகளாக கண்டறியப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த கிராமப் பஞ்சாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.
கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் முக்கிய வளர்ச்சி செயல்திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க அரசுத்துறைகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தினரோடு அல்ஸ்டாம் மற்றும் யுனைடட் வே ஆஃப் பெங்களூரு குழுவும் இணைந்து செயல்பட்டன.இச்செயல்திட்டத்தின் கீழ் இரு அங்கன்வாடி மையங்களில் புதிய வசதிகளும், உட்கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.குழந்தைகளுக்கு உகந்தவாறு இந்த மையங்கள் நல்ல சூழலில் இருப்பதையும், பாதுகாப்பானதாக இவைகளை மாற்றுவதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இக்கிராமத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளிக்கு மதிய உணவு சமையலறை கட்டித் தரப்பட்டிருப்பதுடன், ஒரு கழிப்பறையும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு நடவடிக்கைகளினால் அங்கன்வாடியைச் சேர்ந்த குழந்தைகளும் மற்றும் 150 பள்ளி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே Sustainable Development Goals (SDG) அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த இலக்குகளில் உள்ள 7 இலக்குகளில் நேரடியாக இச்செயல்பாடுகள் அடங்கியிருக்கின்றன.
கூடுதலாக, ஒரு சமுதாய சுகாதார மையம் (சமுதாய கழிப்பறை) இங்கு கட்டப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் விதத்தில் கழிப்பறை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களின் ஆரோக்கியத்தையும், தூய்மையான சூழலையும் மேம்படுத்த இச்செயல்திட்டம் உதவும்.அத்துடன், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வையும் இது உயர்த்தும். இக்கட்டிடத்தின் மின் தேவையை சூரிய ஒளி மூலம் பூர்த்தி செய்யும் திட்டமும் வரும் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வளாகத்தை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி,கோயம்புத்தூர் மாவட்ட பஞ்சாயத்தின் ஊரக மேம்பாட்டு முகமையின் செயல்திட்ட இயக்குனர் கே. கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் -ரெகுலர் திரு. சென்சி முத்துராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் – ஜிபி; A. சுப்புலட்சுமி, உதவி கல்வி அதிகாரி E. ஃபிரான்சிஸ் சார்லஸ், கூட்டுறவு சங்கத் தலைவர் கே. கருப்பசாமி, மண்டல உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் V. வசந்தி, குழந்தை வளர்ச்சி செயல்திட்ட அதிகாரி எஸ். சல்மா, பஞ்சாயத்து தலைவர் E. மரகதவடிவ கருப்பசாமி, அல்ஸ்டாம் கோயம்புத்தூர் ஆலையின் நிர்வாக இயக்குனர் எஸ். செல்வகுமார் மற்றும் யுனைடட் வே ஆஃப் பெங்களூருவின் செயல்திட்ட இயக்குனர் ஸ்ரீராம் அனந்தநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எங்களது சி எஸ் ஆர் திட்டங்களின் கீழ் வளர்ச்சித் தேவைகள் அதிகமுள்ள கிராமங்களில் சிறந்த கல்வி வழங்குதல், சுகாதார மேம்பாட்டிற்கான பணிகளைச் செய்தல் மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல பணிகளை செய்து வருகிறோம். இதன் மூலம் எங்களது நிறுவனம் செயல்பட்டு வரும் இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் சிறப்பான சூழலில் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்த முடிகின்றது. இந்த முயற்சியின் அங்கமாக யுனைடட் வே பெங்களூரு நிறுவனத்துடன் இணைந்து இந்த கிராமத்தின் தேவைகளை பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களோடு இணைந்து கண்டறிந்து அவற்றை தேவை அடிப்படையில் வரிசைப்படுத்தி அவற்றை சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம்.
சமுதாய மேம்பாடு, சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, அல்ஸ்டாம் நிறுவன ஊழியர்களிடமும் சமுதாய நோக்கம் மற்றும் சிறந்த குடிமகனாக வாழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறோம்” என்று அல்ஸ்டாம் – ன் அமைவிட நிர்வாக இயக்குனர் எஸ். செல்வகுமார் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பணியை மேம்படுத்த உதவுவதற்காக உள்ளூர் பஞ்சாயத்திற்கு ஒரு டிராக்டர் வழங்கப்பட்டது. இப்பஞ்சாயத்திலுள்ள 5 கிராமங்களில் வசிக்கும் 1000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் துப்புரவை மேம்படுத்தும் செயல்பாடாக இது மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
2022-ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, வனத்துறையின் உதவியோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சுமார் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. அல்ஸ்டாம் – ன் கோயம்புத்தூர் தொழிலகத்தின் பணியாளர்கள் தன்னார்வலர்களாக இந்நிகழ்வில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்த மரக்கன்றுகள், முறையாக பேணி வளர்க்கப்படுவதற்கு உதவ, ஒரு சொட்டுநீர் பாசன அமைப்பை தமது பங்களிப்பாக பஞ்சாயத்து நிர்வாகம் செய்திருந்தது.
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், இச்சமூகத்திலுள்ள 500-க்கும் அதிகமான பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சாதன தொகுப்புகள் வினியோகிக்கப்பட்டன. இச்சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் நடத்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை மகிழ்ச்சியும், உற்சாகமும் கலந்த மிகவும் வண்ணமயமான ஒரு நிகழ்வாக மாற்றியது.
“சமூகத்தில் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசு மற்றும் பஞ்சாயத்துடன் இணைந்து திறனுடன் செயல்படுவது அதிக பயனளிக்கக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்தோடு அல்ஸ்டாம் நிறுவனத்தின் உதவியோடு இப்பயணத்தை யுனைடட் வே பெங்களூரு நிறுவனம் தொடங்கியது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு செயலையும் நிலைப்புத்தன்மை கொண்டதாக இருப்பதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு இவ்வசதிகளை பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்குமான பொறுப்பு பயனாளிகளை சார்ந்ததாகின்றது. அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்களின் ஆதரவோடு இப்பணிகளை எங்களால் வெற்றிகரமாக நிறைவுசெய்ய முடிந்திருக்கிறது. இப்பகுதியில் இன்னும் அதிகமான செயல்திட்டங்களை செய்வதற்கு பெரிய சாத்தியமிருப்பதை நாங்கள் காண்கிறோம்,” என்று யுனைடட் வே பெங்களூரு நிறுவனத்தின் செயல்திட்ட இயக்குனர் ஸ்ரீராம் அனந்தநாராயணன் கூறினார்.
இந்த ‘ரூரல் ரைசிங்’ திட்டத்தின் வரும் ஆண்டில் ஆசிரியர்களுக்கு தேவைப்படுகின்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவைப்படும் கல்விக்கான உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அதிகப்படியான பயிற்சிகளை வழங்குதல் ஆச்கிய செயல்பாடுகள் மூலம் அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்தும் செயல்கள் நிறைவேற்றப்படும். மேலும் Solar power (சூரிய ஒளி) அடிப்படையாகக் கொண்ட பல்வேறு பணிகளை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.