April 1, 2017 தண்டோரா குழு
கோவை அருகே சேற்றில் சிக்கிய யானையை மீட்ட வனத்துறையினர் மீண்டும்வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
கோவை அடுத்து அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் யானைகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பருவ மழைகள் பொய்த்ததால் வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுகிறது, இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது குடிநீருக்காக வனத்தில் இருந்து வெளியேறி கிராம பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகிறது.
இந்நிலையில் வனப்பகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக குட்டைகளில் நீர் உள்ளதால் வன விலங்குகள் அங்கு நீர் அருந்தி வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பாலமலை குஞ்சூர் வனப்பகுதியில் உள்ள குட்டை ஒன்றில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துள்ளது.
அப்போது,25 வயது மதிக்க தக்க பெண் யானை சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் அலறியுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது தாய் யானை சேற்றில் சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது சேற்றில் சிக்கிய யானையின் அருகே அதன் குட்டிகள் உடன் இருந்ததால் மீட்கும் பணி பாதிக்கப்பட்டது.தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி இயந்திரம் கொண்டு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு தாய் யானை மீட்கப்பட்ட்து.
ஆனால் நீண்ட நேரம் தண்ணீரில் யானை இருந்ததால் அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நிற்க முடியாமல் படுத்துக்கொண்டது.
இதனால் வனத்துறை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர், யானை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கபட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.