July 13, 2017 தண்டோரா குழு
ஓடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ சேற்று நீரை கடக்க அக்கட்சியின் தொண்டர்கள் சுமந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிஸா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ மனாஸ் மட்காமி மற்றும் நபரன்க்பூர் மற்றொரு எம்.பி பலபாத்ரா மஜ்ஹி என்பவரும் ஜூலை 11ம் தேதி, மல்கங்கிரி தொகுதியின் மொட்டு பஞ்சாயத்தின் நடைபெற்று வரும் சில நலத்திட்டங்களை பார்வையிட்டனர்.
அந்த இடத்தில் சேற்று நீர் ஓடிக்கொண்டிருந்தது. எம்.பி பலபாத்ரா மஜ்ஹி தொண்டர்கள் உதவியில்லாமல் அதை கடந்துவிட்டார். ஆனால் எம்.எல்.ஏ மனாஸ் மட்காமி அந்த சேற்று நீரை கடக்க, தொண்டர்கள் சுமந்து சென்றதை அங்கிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து, அதை இணையதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ மனாஸ் மட்காமி கூறுகையில்,
“என் தொண்டர்கள் என்மீது கொண்டிருந்த அன்பாலும் பாசத்தாலும் இப்படி செய்தார்கள். நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்று கூறினார்.
கடந்த ஆண்டு, மத்திய பிரதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணா பகுதியை பார்வையிட்டபோது, தண்ணீர் பகுதியை தாண்ட போலீசார் அவரை சுமந்து சென்றது சர்ச்சையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.