September 5, 2017 தண்டோரா குழு
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார்.
இதையடுத்து வளர்மதி நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி சேலம் போலீசார் கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 17ம் தேதி வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க சேலம் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதற்கடையில், வளர்மதியின் தந்தை மாதையன் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக தனது மகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். காவல்துறை அனுமதி பெற்றே வளர்மதி போராட்டங்களில் ஈடுபட்டார்.
எனவே வளர்மதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் வளர்மதி மீது தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.