February 14, 2017 தண்டோரா குழு
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வி.கே. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, வி.கே. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் அனைவருக்கும் கர்நாடகத்தின் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. அதை எதிர்த்து கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் அவர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் வி.கே. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜெயலலிதா மறைந்துவிட்டதால், சிறைக்கு செல்ல முடியாததால் அவருக்கு 14௦ கோடி ரூபாய் அபராதமும் மற்ற மூவருக்கும் தலா 1௦ கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறுகையில்,
“ஓ. பன்னீர் செல்வம் அ.தி.முக- விலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். புதிய சட்டப் பேரவையில் அதிமுகவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் கீழ் புதிய அரசு அமையும். சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட
வி.கே. சசிகலா மற்றும் இருவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் வி.கே. சசிகலா ஆதரவாளர்களாக இருப்பதால், ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பது நிச்சயம்” என்றார்.