June 13, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம் சூலூர் வட்டாரத்தில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (ஒன்றிய திட்டம்) புனிதா பல்வேறு இடங்களில் சோள விதைப்பண்ணைகளை கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கோவை மாவட்ட விவசாயிகள் அதிகளவில் சோளப் பயிரினை தானியப் பயிராகவும், தீவனப் பயிரமாகவும் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக கோவில்பட்டி-12 மற்றும் கோ-32 போன்ற அதிக மகசூல் தரக்கூடிய ரங்கள் சாகுபடி செய்யப்பட்டு மாவட்டத்திற்கு தேவையான விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் சோளப் பயிர்கள் வறட்சியினை தாங்கக்கூடியதால் தண்ணீரின் தேவை குறைவதுடன், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடியது. தானியங்களுக்கு விதைப்பதை காட்டிலும் விதைப்பண்ணை அமைத்து உற்பத்தி செய்வதனால் ,லாபகரமானதாகவும் இருக்கிறது. தற்போது 10 ஆண்டுக்கு உட்பட்ட அதிக மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரங்களை விதைப்பண்னையாக அமைத்து விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக கிலோவுக்கு ரூ. 30 மானியமாக தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து இயக்கத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
விதைப்பண்னை ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் அல்லது உழவன் செயலியின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கள ஆய்வில் சூலூர் வட்டாரத்தின் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.