February 7, 2017 தண்டோரா குழு
தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து முறையிட, தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தில்லி பயணமாகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராகக் கடந்த டிசம்பர் மாதம் வி.கே. சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.அதன் பிறகு பிப்ரவரி 5- ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) கூட்டத்தில் தமிழக சட்டமன்ற கட்சி தலைவராக வி.கே சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டப் பேரவை அ.தி.மு.க. கட்சித் தலைவராக வி.கே. சசிகலா தேர்வு செய்யப்பட்டதனால் தமிழக முதல்வராக அவர் பொறுப்பேற்க உள்ளார். அதையடுத்து, தமிழக முதலமைச்சரர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகினார்.
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த மேல்முறையீட்டின் மீது இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு முன்னர் சசிகலா முதல்வராக பதவியேற்கக் கூடாது. தீர்ப்பு வந்த பிறகே பதவியேற்க அனுமதிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் சசிகலா முதல்-அமைச்சராகப் பதவியேற்றால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்று தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் , பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு அவர் தில்லிக்குப் பயணமாகிறார் எனத் தெரியவந்துள்ளது.