November 9, 2017 தண்டோரா குழு
ஜப்பான் நாட்டிலுள்ள நிறுவனம் ஒன்று, புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஊழியர்கள், அதை கைவிட்டால் அவர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவை அடிப்படையாக கொண்ட மார்க்கெட்டிங் நிறுவனமான பிலியாவின் நிறுவனர், டாகவோ அசுகாவிடம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சிலஊழியர்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. அதனால், அவர்களுக்கு பணியிலிருந்து 15நிமிட இடைவேளை அளிக்க கூடாது என்று புகார் அளித்தனர்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில்,புகைபிடிக்கும் பழக்கம் உடையர்களை தண்டிக்காமல், அந்த பழக்கத்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த நிறுவனத்தின் நிறுவனர், டாகவோ அசுகா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, புகைபிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் கூடுதலாக விடுமுறை தரப்படும் என்று அறிவித்தார்.இந்த அறிவிப்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஊழியர்களை, அந்த பழக்கத்திலிருந்து வெளிவர அவர்களை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிலியா ஊழியர்களில் கிட்டத்தட்ட 35சதவீத ஊழியர்கள் புகைப்பிடிப்பவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அறிக்கை தெரிவிக்கிறது.அதோடு, ஜப்பான் நாட்டில் 22 சதவீதம் மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.