May 23, 2023
தண்டோரா குழு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் ஆசிரியர் சலீம் இறைவசனங்களுடனும் வரவேற்புரையுடனும் துவங்கியது.தொடர்ந்து, ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் முஹம்மது இஸ்மாயில் இம்தாதி சிறப்புரை நிகழ்த்தினார். பெருநாட்களின் போது எளியவரையும் சந்தோஷத்துடன் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு ஈந்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் நாட்களாக மாறிட வேண்டும்.இதனையே ஈகைத் திருநாள் வலியுறுத்துகிறது.ஒவ்வொரு சமயத்தாரும் சகோதர சமயத்தவரின் நம்பிக்கைகளை புரிந்துகொள்ள இதுபோன்ற ஒன்றுகூடல்களை அனைத்து மதத்தினரும் முன்னெடுப்பதன் மூலமாக சமூகங்களுக்கிடையே சகோதரத்துவமும் நல்லிணக்கமும் தழைத்தோங்கும் என தனது சிறப்புரையில் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகரக் காவல்துறை இணை ஆணையாளர் சந்தீஷ், IPS தனது வாழ்த்துரையில், “அனைத்து சமயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே கற்றுத்தர வேண்டும். இதன்மூலம் சமூகப் புரிதலையும் சகோதரத்துவத்தையும் வளர்த்திடுவதுடன் தவறான கருத்துகளைக் களைந்திடவும் முடியும். தனி நபர் அல்லது குழுவினர் செய்திடும் தவறான செயல்களைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்படுவது தவிர்த்திட வேண்டும். இப்படியான ஒரு இளைய சமூகம் வார்தேடுக்கப்படும் போது சிறந்த முன்னேற்றத்தை நம் நாடு அடைந்திடும்.” எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. கீதாலட்சுமி, KG மருத்துவமையின் தலைவர் Dr. K. பக்தவத்சலம், சாந்தி ஆஷ்ரம் தலைவர் Dr. வினு அரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர், P.S. உமர் ஃபாரூக்
நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமயத் தலைவர்கள், சமூகசேவை செயற்பாட்டாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.