January 28, 2017 தண்டோரா குழு
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் தஞ்சை, மதுரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி ஏற்கனவே 10 வீரர்கள் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை காலையில் மேலும் 5 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் இளவரசன் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இவருடைய பெற்றோர் பூமிநாதன், அமுதா ஆகியோர் கூலித் தொழிலாளர்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் பி.ஏ. வரை படித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், ராஷ்ட்ரீய ரைபிள் குழுவில் ராணுவவீரராகப் பணியாற்றி வந்தார்.
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றொருவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காப்பட்டியைச் சேர்ந்த சுந்தர்பாண்டி (26) என்ற ராணுவ வீரர் என்று தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு திருமணமான சுந்தரபாண்டியின் மனைவி பெயர் சுகப்பிரியா. தற்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.