January 7, 2017 தண்டோரா குழு
“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஏன் போராடவில்லை?” என்று திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இக்கேள்வியை எழுப்பினார்.
மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்திய டி. ராஜேந்தர் பிறகு, அப்பகுதி மக்களிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி, திருமங்கலம் அருகே கரடிகல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு டி. ராஜேந்தர் பேசியதாவது:
“தமிழகத்தில் மதுரையில் மட்டுமே உண்மையான மாடுபிடி வீரர்கள் உள்ளனர். ஜல்லிகட்டுப் போட்டியை நடத்துவதில் மத்திய மாநில அரசுகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தடையை உடைத்து, ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும்.
தமிழர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதால்தான் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், மக்களுக்கு கோபம் வந்தால் எதையும் சந்திக்கும் தைரியம் தமிழர்களுக்கு உள்ளது.
ஜல்லிகட்டுக்காக தமிழக நடிகர்கள் ஏன் போராடவில்லை? மத்திய அரசில் இடம்பெற்ற தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த போதிய அழுத்தம் தரவில்லை”