January 20, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் பாதுகாப்பிற்காக சீருடையில் வந்த ஒரு காவலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
புது தில்லி சென்றுள்ள முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தான் திரும்ப வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை.
விவசாயத்துக்குச் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்ணச் சாகடித்துவிட்டார்கள். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா, விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று?
தமிழன் எப்போதும் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டான். என் சொந்த ஊர் ராமநாதபுரம். அதுதான் என்னுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு போய் பிழைக்கச் செல்வது? நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும்? இந்த போராட்டம் வெற்றி பெறும்.
இதற்கு அடுத்ததாக, மணல் கொள்ளையை எதிர்த்து நாம் போராட வேண்டும்”.இவ்வாறு உணர்வுபூர்வமாக அந்தக் காவலர் சீருடையில் போராட்டக் களத்தில் உரையாற்றினார். காவலரின் உரைக்கு வரவேற்பு தெரிவித்த மாணவர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.